சோனம் வாங்சுக்கை டார்கெட் செய்யும் சிபிஐ! லடாக் போராட்டத்தில் வெளிநாட்டு நிதியுதவியா?

Published : Sep 25, 2025, 04:49 PM IST
Sonam Wangchuk

சுருக்கம்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரிப் போராடும் சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கின் HIAL நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. லடாக்கில் வன்முறைக்கு வாங்க்சுக்கின் தூண்டுதலே காரணம் என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்திப் போராடி வரும் கல்வியாளரும் சமூக ஆர்வலருமான சோனம் வாங்க்சுக் (Sonam Wangchuk) தொடங்கிய நிறுவனம் வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ (CBI) விசாரணை தொடங்கியுள்ளது.

சோனம் வாங்க்சுக் நிறுவிய இமயமலை மாற்று வழிகள் நிறுவனம் - லடாக் (HIAL) அமைப்பின் நிதி ஆதாரங்கள் குறித்து சிபிஐ, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னரே விசாரணையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வாங்க்சுக் பாகிஸ்தானுக்குச் சென்றது குறித்தும் சிபிஐ ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், லடாக் நிர்வாகம் HIAL அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரத்து செய்தது. இது தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை அடக்கும் முயற்சி என்று மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்புப் பாதுகாப்பு கோரும் லடாக் குழுக்கள் குற்றம் சாட்டின.

வன்முறைக்குக் காரணம் யார்?

இந்தச் சமீபத்திய நிகழ்வுகள், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக சோனம் வாங்க்சுக் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுடன் ஒத்திருக்கின்றன.

புதன்கிழமை (நேற்று), மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது, லடாக் இயக்க ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், 40 காவல்துறை அதிகாரிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறைச் சம்பவத்துக்கு முன்னதாகவே, தமது கோரிக்கைகளுக்காகத் தான் மேற்கொண்ட 15 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாங்க்சுக் வாபஸ் பெற்றிருந்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் இருவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து லே அப்பெக்ஸ் பாடி (Leh Apex Body) இளைஞர் பிரிவு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள், பாஜக தலைமையகம் மற்றும் மலை கவுன்சில் அலுவலகத்தை இலக்காக வைத்துத் தீ வைத்ததுடன், வாகனங்களுக்கும் தீ மூட்டினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரக் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

மத்திய அரசின் குற்றச்சாட்டு இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த வன்முறைக்குச் சமூக ஆர்வலர் வாங்க்சுக்கின் தூண்டும் அறிக்கைகளே காரணம்" என்றும், "அரசுக்கும் லடாக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், சில அரசியல் உள்நோக்கம் கொண்ட தனிநபர்கள் மகிழ்ச்சியடையவில்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

"வாங்க்சுக் உண்ணாவிரதம் இருந்த கோரிக்கைகள், உயர் அதிகாரம் கொண்ட குழுவின் (HPC) விவாதத்தில் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளன. பல தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி வலியுறுத்தியபோதிலும், அவர் அரபு வசந்தம் (Arab Spring) பாணிப் போராட்டங்கள் மற்றும் நேபாளத்தின் 'ஜென் Z' போராட்டங்கள் பற்றியத் தூண்டும் குறிப்புகள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தினார்" என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான புன்ட்சோக் ஸ்டான்சின் செபாக் (Phuntsog Stanzin Tsepag) செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்கள்:

லடாக் மாநில நிர்வாகம் கடந்த மாதம் HIAL அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ரத்து செய்தது. தற்போது சிபிஐ விசாரணை, அத்துடன் வாங்க்சுக்கின் பாகிஸ்தான் பயணம் குறித்த ஆய்வு எனத் தொடர்ச்சியான நடவடிக்கைகள், மாநில அந்தஸ்து கோரிப் போராடி வரும் லடாக் சமூகத்தின் மத்தியிலும், வாங்க்சுக்கின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!