
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வட்காவ்ஷேரி (Vadgaonsheri) பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெருநாய்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி (CCTV) காட்சியில், இரண்டு சிறுமிகள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென நான்கு தெருநாய்கள் அவர்களைத் தாக்குகின்றன. அதில் ஒரு சிறுமி தப்பியோட, இன்னொரு சிறுமியை நாய்கள் துரத்திப் பிடித்து, சிறிது தூரம் இழுத்துச் சென்று கடித்துக் காயப்படுத்துகின்றன.
நல்ல வேளையாக, அங்கு விரைந்து வந்த இரண்டு பேர் அந்தச் சிறுமியை நாய்களிடமிருந்து மீட்டனர். காயமடைந்த அச்சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நாய்க்கடி சம்பவங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தல் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம், மகாராஷ்டிராவின் பண்டாரா (Bhandara) மாவட்டத்தில் நான்கு வயது சிறுவனை 20 முதல் 25 நாய்கள் கொண்ட ஒரு கூட்டம் தாக்கியது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தலையிட்டு நாய்களை விரட்டியதால் அச்சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். கடந்த மாதம் பிம்ப்ரி சின்ச்வாட் (Pimpri Chinchwad) பகுதியிலும், இருண்ட சந்தில் நடந்து செல்லும்போது ஒருவரை ஏழு தெருநாய்கள் தாக்கின. அந்தச் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகப் பரவின.