
சிபிஐ புதிய இயக்குநராக நியமிக்கப்பட்ட டெல்லி போலீஸ் ஆணையர் அலோக் குமார் வர்மா இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத் தலின்படி சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. அதன்படி பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாத இறுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் டெல்லி போலீஸ் ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார்.
1979-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம், யூனியன் பிரதேச ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த அலோக் குமார் கடந்த 11 மாதங்கள் டெல்லி காவல் துறை ஆணையராக பணியாற்றி வருகிறார். வரும் ஜூலையில் அவர் ஓய்வுபெற உள்ளார். எனினும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அலோக் குமார் வர்மாரின் 36-ஆண்டு போலீஸ் துறை அனுபவத்தில் 24-வது பதவி இதுவாகும். கடந்த 1979-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி டெல்லி போலீஸ் துணை ஆணையராக அலோக் வர்மா தனது போலீஸ் பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.