
உலகிலேயே முதன் முதலாக குடிநீர் முழுமையும் தீர்ந்து போகும் நகரம் என்று தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டவுன் நகரில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏற்கனவே பயன்படுத்திய நீரை, மீண்டும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குடிநீருக்காக மக்கள் அல்லலாடும் நிலை கேப்டவுனில் நிலவி வருகிறது. அந்நகரத்தில் குடிநீர் முழுமையும் தீர்ந்துபோய், 'டே ஜீரோ' எனப்படும் பூஜ்ஜிய நாளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கேப்டவுன் நகரைப் போன்று விரைவில் தண்ணீர் தீர்ந்து போகும் வாய்ப்புள்ள 11 நகரங்களை ஐ.நா. கணித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரமும் உள்ளது என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் பல நகரங்களில் தண்ணீர் பஞ்சத்துக்கு ஆளாகும் என்று ஐ.நா. கூறியுள்ளது.
தண்ணீர் தீர்ந்து போகும் நகரங்களில் முதல் நகரமாக கேப்டவுன் உள்ளது. இந்த செய்தியே பலருக்கு அதிர்ச்சியை அளித்து வரும் நிலையில், இந்தியாவின் பெங்களூருவிலும் விரைவில் தண்ணீர் தீர்ந்து போகும் வாய்ப்புள்ள நகரங்களில் ஒன்று என்று ஐ.நா. கூறியுள்ளது. மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.நா.வின் கணிப்புப்படி, பிரேசிலின் சா பாலோ, இந்தியாவின் பெங்களூரு, சீனாவின் பெய்ஜீங், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, எகிப்தின் கெய்ரோ, ரஷ்யாவின் மாஸ்கோ, துருக்கியின் இஸ்தான்புல், மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி, லண்டன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி நகரம் நகரங்களை பட்டியலிட்டுள்ளது.