
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோன்டா மாவட்டத்திற்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. உத்திரப்பிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலையில் பரேலி என்ற இடம் அருகே நள்ளிரவு 1 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது.
.மோதிய வேகத்தில் பேருந்தும், லாரியும் தீப்பிடித்து எரிய தொடங்கின. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக பேருந்தை விட்டு இறங்க முடியவில்லை.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
விபத்தினை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உத்தரப் பிரதேச போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தால் உத்தரப் பிரதேசம் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.