மலப்புரத்தில் ஜிமிக்கி கம்மலுக்கு ரோட்டில் நடனமாடிய முஸ்லிம் பெண்கள்... கடும் எதிர்ப்பால் பரபரப்பு!

First Published Dec 4, 2017, 2:12 PM IST
Highlights
Burqa clad Muslim girls dance in flash mob in Malappuram get trolled for insulting Islam


கடந்த டிச.1ம் தேதி எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக, கேரள மாநில அரசின் சுகாதாரத் துறை சார்பில் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூன்று இஸ்லாமியப் பெண்கள்  தலையில் ஹிஜாப் அணிந்த நிலையில் சாலையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடினர். இதற்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட இந்தியா மட்டுமல்லாது, உலகின் சில இடங்களிலும் வெலிப்படிண்டே புஸ்தகம் படத்தில் வரும் ஜிமிக்கிக் கம்மல் பாடலுக்கு பரவலாக நடனமாடி மகிழ்கின்றனர் மக்கள். அந்தப் பாடலுக்கு விளம்பரத்துக்காக நடனம் ஆடிய ஷெரில் கடவன் இப்போது பிரபலமாகிவிட்டார். 

அந்த வகையில் இந்தப் பாடலையே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொண்டது சுகாதாரத் துறை. மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட பாடலும் நடனமும் இப்போது மலப்புரத்தில் சோகத்தை பரப்பியுள்ளது. 

மலப்புரத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல் மருத்துவம் பயிலும் மூன்று இஸ்லாமிய மாணவிகள், மலப்புரத்தில் உள்ள கோட்டக்குன்னு சந்திப்பு அருகே ஜிமிக்கி கம்மல் பாடலை ஒலிக்கச் செய்து சாலையில் நடனமாடினர். இந்தக் காட்சிகள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது

இஸ்லாமிய உடையான தலையில் ஹிஜாப் அணிந்தபடி எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு நடனமாடிய மூன்று இஸ்லாமிய மாணவிகளின் செயல் ஏற்க முடியாதது என்று இஸ்லாமியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரு நாட்களில், மலப்புரத்தில் பல இடங்களில் இஸ்லாமியக் குழுக்கள் பொது மேடை போட்டு, கடுமையாக விமர்சனம் செய்தனர். நடனம் ஆடிய மாணவிகளின் இல்லத்துக்குச் சென்று, வீட்டில் உள்ளவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டும் என்றும் மேடையில் கோபத்தை வெளிப்படுத்தினர் சிலர். இஸ்லாமியப் பெண்கள், பொதுமக்கள் கூடும் இடத்தில், தங்கள் கால்களை ஆட்டி பலர் முன்னிலையில் நடனம் ஆடியதை ஏற்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தனர் சிலர்.

இதை அடுத்து, மிக மோசமான வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் அந்தப் பெண்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து கருத்துகளை எழுதியுள்ளனர். இது குறித்த வீடியோ சில வலைத்தளங்களில் வெளியானது. ஆனால், சர்ச்சை அதிகரித்த நிலையில், சில தளங்களில் இருந்து அந்த வீடியோ நீக்கப் பட்டுள்ளது. 

குறிப்பாக, அரசின் சுகாதாரத் துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பதால், அரசுக்கு நெருக்குதல் கூடியுள்ளது. 

click me!