பன்முகம் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் உருவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்
"வெவ்வேறு சமூகங்களுக்கு தனித்தனி சட்டங்கள் என்று ஒரு மாறுபட்ட அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என்று போபாலில் பேசிய இந்திய பிரதமர் மோடி அவர்களின் பேச்சுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவரும், மாண்புமிகு நீதி அரசருமான திரு. ரிதுராஜ் அவஸ்தி அவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் "பன்முகம் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் உருவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25 படி ஒருவர் தான் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கும், கடைபிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை உறுதி செய்துள்ளது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஆவின் பால் கொள்முதல் விலை: அமைச்சர் சொன்ன தகவல்!
வேற்றுமையில் ஒற்றுமைக்கும் கலாச்சார பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா என்றும், பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிப்பதன் மூலம் இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முக கட்டமைப்பின் சாராம்சத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழி வகுக்கும் என கவலை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள், நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம் எனவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நமது சமூகத்தில் நிலவும் சமூக பொருளாதார ஏற்றதாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும். வெவ்வேறு சமூகங்கள் வளர்ச்சி கல்வி மற்றும் விழிப்புணர்வின் வெவ்வேறு நிலையை கொண்டுள்ளது என்றும், ஆனால் அனைவருக்கும் பொருந்தக் கூடிய ஒரே மாதிரியான அணுகுமுறை தற்பொழுது உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்க கூடும் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி மேயர் உள்பட பலருக்கு மதிப்பூதியம்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு - முழு விவரம்!