பாலம் விபத்து: திட்டமிடப்பட்ட ஒன்று - பீகார் அரசு அந்தர் பல்டி!

By Manikanda PrabuFirst Published Jun 6, 2023, 4:07 PM IST
Highlights

பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தை எஸ்பி சிங்லா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டி வருகிறது. பாகல்பூர் மாவட்டத்தின் அகுவானி மற்றும் ககாரியா மாவட்டத்தின் சுல்தான்கஞ் பகுதிகளுக்கு இடையே கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளை கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அம்மாநில  முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார்.

சுமார் 3.1 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டால் விக்ரமசிலா சேது மேம்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து சிக்கல் தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பாகல்பூர் மாவட்டத்துடன் ககாரியா, சஹர்சா, மாதேபுரா மற்றும் சுபால் ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் வகையில், டால்ஃபின் வடிவமைப்பில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2019ஆம் ஆண்டில் முடியும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், காலாவகாசம் இதுவரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகள் காரணமாக பணிகள் மேற்கொள்வதில் தாமதமாவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த பாலம் இதுவரை இரண்டு முறை இடிந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில், மூன்றாவது முறையாக இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

a portion of under construction bridge over Ganga river collapsed today. The Aguanhighat Sultanganj bridge will connect Khagaria and Bhagalpur districts. pic.twitter.com/7DLTQszso7

— All India Radio News (@airnewsalerts)

 

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து கட்டுமான நிறுவனம் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை  முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திட்டமிட்டு இடிக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பாலத்தின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளை நிபுணர்கள் சுட்டிக்காட்டியதால், பாலத்தின் சரிந்து விழுந்த பகுதி வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்டதாக அம்மாநில அரசு கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காங்கிரஸ் கூறியது தவறு - ஐ.ஆர்.சி.டி.சி மறுப்பு!

இதுகுறித்து அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இடிந்து விழுந்தது நினைவிருக்கலாம். அதன்பிறகு, ஐஐடி-ரூர்க்கியை அணுகி ஆய்வு நடத்தினோம்.” என்று தெரிவித்துள்ளார். பீகார் மாநில சாலை கட்டுமானத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்ய அம்ரித் கூறுகையில், இறுதி அறிக்கைக்காக காத்திருக்கக் கூடாது; பாதுகாப்பே முக்கியம் என்பதால், பாலத்தின் சில பகுதிகள் இடித்து வருகிறோம். அத்தகைய தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியே இது” என தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

click me!