அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

By Ganesh RamachandranFirst Published Dec 3, 2021, 12:55 PM IST
Highlights

ஏற்கனவே லஷ்கர்-இ-தாய்பா இயக்கம் பெயரில் மிரட்டல் கடிதம் வந்த நிலையில், ராமர் கோவிலை தகர்க்கப்போவதாக மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டுள்ளது. நாடே இந்தத் தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டுள்ளது. காரணம் பாரதிய ஜனதா கட்சியின் பலம் என்ன என்பதற்கு இந்தத் தேர்தல் ஒரு முக்கிய சோதனைக் களம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற பல ஆண்டு முழக்கம் செயல் வடிவம் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோவில் கட்டும் பணிகளை பிரதமர் மோடியே சென்று துவக்கி வைத்தார். இவை எல்லாம் நடைபெற்ற பிறகு வரும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

லக்கிம்பூர் விவசாயிகள் மரணம், இந்து முஸ்லிம் பிரச்சனை என்று பல தேர்தல் பேசுபொருட்கள் இருந்தாலும் எபோதும் போல அயொத்தி ராமர் கோவில் முக்கிய விவாதப் பொருளாகவே உள்ளது. இந்த நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உத்தர பிரதேச அரசின் அவசர உதவி எண் 112-க்கு நேற்று காலை ஒரு அழைப்பு வந்துள்ளது. இதில், பேசிய ஒருவர் தன்னுடைய பெயரை குறிப்பிடாமல் இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மர்ம நபர் யார் என்பது விசாரிக்கப்படும் வேளையில், அயோத்தி நகரம் முழுவது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது உத்தரப் பிரதேச காவல்துறை.

இதற்கு முன்பாக தீவிரவாத அமைப்பான லஷ்கர்-எ-தொய்பா பெயரில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.அதில் அயோத்தி, வாரணாசி, லக்னோ, கான்பூர், அலகாபாத் உள்ளிட்ட 46 ரயில் நிலையங்களில் வெடிவைத்து தகர்க்க உள்ளதாக மிரட்டப்பட்டிருந்தது. இதன் மீது மாநில உளவுத்துறை சார்பிலும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வந்த தொலைபேசி அழைப்பிற்கு பின் அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்யா மாவட்டத்தின் மடங்கள், கோயில்கள், தங்கும் விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரயில்நிலையங்களிலும் ஆர்பிஎப் மற்றும் ஜிஆர்பிஎப் படையினர் மோப்பநாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

click me!