
மத்திய அரசு செல்லாத ரூபாய் அறிவிப்பு வெளியிட்டபின், நாடுமுழுவதும் ரூ.130 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, ரூ.2 ஆயிரம் கோடி கணக்கில் வராத பணத்தை வரிசெலுத்துவோர் தானாக வந்து ஒப்படைத்துள்ளனர் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், அமலாக்கப்பிரிவு பரிந்துரையின் பேரில், 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கம் வகையில், கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளைச் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து கருப்பு பணத்தை ஒழிக்கும்நடவடிக்கையை அமலாக்கப்பிரிவினரும், வருமான வரித்துறையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மத்திய நேர்முக வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ கடந்த மாதம் நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் அறிவிப்புக்கு பின், ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு துரிதமாக விசாரணை நடந்து வருகிறது. வருமானவரிச் சட்டத்துக்கு மாறாக செயல்பட்டு பணம், நகை சேர்த்தவர்கள் விவரங்களை நாங்கள் அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. க்குபரிந்துரை செய்துள்ளது.இதுவரை 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளோம்.
இதுவரை, ரூ.130 கோடிக்கும் மேலான ரொக்கப்பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.2 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை வருமான வரித்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.