
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து நிலவி வரும் அமைதியற்ற சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக பா.ஜ.க. மூத்த தலைவர் திரு. யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான 5 நபர் குழு இன்று ஸ்ரீநகர் சென்றுள்ளது. அம்மாநில முதலமைச்சர் மற்றும் பிரிவினைவாத தலைவர் உள்ளிட்டோரை இக்குழு சந்தித்துப் பேச உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்ஃபுல் முஜாகிதீன் தலைவர் புர்ஹான் வானி என்ற தீவிரவாத இயக்கத் தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து அம்மாநிலம் பெரும் கலவர பூமியாக மாறியது. இதனால், பல்வேறு இடங்களில் இன்றும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.
கடந்த 3 மாதங்களாக இதுபோன்ற சூழல் நீடிப்பதால், ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அங்கு பதற்றத்தை தணிக்க மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கும் நிலையில், மீண்டும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. யஷ்வந்த் சின்ஹா தலைமையில் 5 பேர் கொண்ட குழு இன்று ஜம்மு காஷ்மீர் சென்றது. 3 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்யும் இக்குழுவினர், முதலமைச்சர் திருமதி. Mehbooba Mufti, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரிவினைவாத இயக்கத் தலைவர் Syed Ali Geelani உள்ளிட்டோரை சந்தித்துப் பேச உள்ளது. கடந்த முறை ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய அரசின் பிரதிநிதிகள் குழுவை சந்திக்க மறுத்த ஹிலானி, இம்முறை பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.