
பயங்கரவாதம் சில நேரங்களில் அதனை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் பாயும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
பயங்கரவாதத்தை எந்த இடத்திலும், எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தார். குவெட்டா சம்பவத்தில் பலியானவர்களுக்காக தாம் மிகவும் வருந்துவதாக திரு. மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தில் ஈடுபடும் யாரையும் எந்தவொரு அரசும் ஆதரிக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், சில நேரங்களில் அது, அவர்களையே திருப்பித் தாக்கும் என்றும் எச்சரித்தார். எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், அதற்கு ஏற்ப இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் திரு.பாரிக்கர் தெரிவித்தார்.