
நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 15 கோடி மக்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய மனநில ஆய்வு மையம் கூறியுள்ளநிலையில், கர்நாடக மாநில மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வை வெளியிட்டது பெங்களூரு நகரில் உள்ள மனநல மற்றும் நரம்பியல் தேசிய ஆய்வு மையம்(என்.ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ்.) ஆகும்.
தமிழகம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்காளம், மணிப்பூர், அசாம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் வயதுவந்தோர் மற்றும் 12 ஆயிரம் பதின் இளம் பருவத்தினரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்களில் 8 சதவீதம் பேர் மனநோயாளிகளாக இருக்கிறார்கள். இந்த 8 சதவீதம் பேரில், 7.3 சதவீதம் பேர், 13 முதல் 17 வயதுடையவர்கள் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரியதாகும்.
சட்டீஸ்கர், மேற்குவங்காளம், மணிப்பூர், அசாம் ஆகிய மாநில மக்கள் கடும் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
மனநல மற்றும் நரம்பியல் தேசிய ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.என். கங்காதர் கூறுகையில், “ நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் நாடுமுழுவதும் 15 கோடி மக்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அதில் 30 முதல் 49 வயதுகளில் இருப்போர், 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
நகர்புறங்களில் குறைவான வருமானம், கல்வியறிவு இல்லாததால் இருக்கும் பகுதிகளில் இத்தகைய மனநல நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக எழுகிறது.
நாட்டில் உள்ள 10 பேரில் ஒருவருக்கு, மனநிலம் தொடர்பான மனஅழுத்தம், தேவையில்லாத பயம், மனச்சோர்வு ஆகிய பாதிப்புகள் உள்ளன. மன அழுத்தம் மற்றும் நரம்பியல் தொடர்பான நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 2சதவீதம் பேர் மிகக்கடுமையான மனநோயினாலும், 50 சதவீதம் பேர் மிதமான வெளியில் தெரியாத வகையில் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயத்துக்கு மேற்பட்டோரில் 4.6 சதவீதம் பேர் மது அருந்துதலால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
மனநல மற்றும் நரம்பியல் தேசிய ஆய்வு மையத்தின் தொற்றுநோயியல் துறையின் தலைவர் டாக்டர் குருராஜ் கூறுகையில், “ இந்த தீவிர மனநோய்தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு செய்யத் தூண்டுவதற்கு முக்கியக்காரணமாக இருக்கிறது. நாட்டில் நடக்கும் தற்கொலையில் 0.9 சதவீதம் பேர் மனநோயில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்களாகவே இருக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.