
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டாதது வருத்தமளிக்கிறது. தேவைப்பட்டால் புதுச்சேரியிலும் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார்.