பீகார் சாதிவாரி கணக்கெடுப்பால் சில சாதிகளை தவிர மற்றவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறார்கள் என சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்
பீகார் மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் பின்னணியில் நன்கு வடிவமைக்கப்பட்ட அரசியல் இருப்பதாகவும், அதிகாரத்துடன் தொடர்புடைய ஒரு சில சாதிகளைத் தவிர மற்ற சாதிகள் ஏமாற்றப்பட்டதாக உணருகிறார்கள் எனவும் பாஜக மூத்த தலைவரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சுஷில் குமார் மோடி, பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பீகாரில் உள்ள பெரும்பாலான சாதியினருக்கு அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களில் நம்பிக்கை இல்லை. அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதில் ஏதோ அரசியல் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இதனை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மோசடி என அவர்கள் சந்தேகிக்கிறார்கள்” என்றார்.
அதிகாரத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய சில சிறப்புச் சாதிகளைத் தவிர, மற்ற சாதிகளின் தற்போதுள்ள மக்கள்தொகையைப் புறக்கணித்து புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு எடுக்கப்பட்டபோது, பாஜக ஆதரவு தெரிவித்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக அது மடைமாற்றப்பட்டபோது, பல குறைபாடுகள் இருந்தன. எனவே, கீழ்மட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் சில சாதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறுவதற்கு ஏதேனும் உதாரணம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த சுஷில் குமார் மோடி, “பல உதாரணங்கள் உள்ளன. வைசியர் மற்றும் நிஷாத் போன்ற சில சாதிகள் 8-10 துணை சாதிகளாக உடைத்து புள்ளிவிவரத்தில் காட்டப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை உணரவில்லை. பீகாரில் வைஷ்ய சமூகத்தின் மக்கள்தொகை 9.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது, ஆனால் இது கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படவில்லை.” என்றார்.
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
தற்போதைய அரசாங்கத்தில் இருக்கும் சாதி-மத மக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக துணை சாதிகளின் புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் பீகார் மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்தந்த மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு மாநிலக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.