பிரதமரை பப்பாஞ்சி ஆக்கிட்டாங்க! கொந்தளிக்கும் கேரள பாஜக தொண்டர்கள்!

By Srinivasa GopalanFirst Published Dec 30, 2022, 11:09 AM IST
Highlights

கேரளாவில் புத்தாண்டு கொண்டாடத்திற்காக வைக்கப்பட்ட பிரம்மாண்ட பப்பாஞ்சி பொம்மை பிரதமர் நரேந்திர மோடி சாயலில் இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

கேரள மாநிலம் கொச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கொச்சி கார்னிவல் என்ற பெயரில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுவருகிறது. கொச்சி கடற்கரை பகுதியில் இதற்காக பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை உருவாக்கப்படும்.

இந்த கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மையை கேரள மக்கள் பப்பாஞ்சி பொம்மை என்று அழைப்பார்கள். இந்த பொம்மை ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்படுவது வழக்கம்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் இறுதியாக டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கும்போது இந்த பப்பாஞ்சி பொம்மை தீயிட்டு எரிக்கப்படும். கடந்த ஆண்டில் நிகழ்ந்த தீமைகளை எல்லாம் பொசுக்கிவிட்டு புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு கொச்சி கார்னிவல் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ள பப்பாஞ்சி பொம்மையின் முகம் பிரதமர் மோடியைப் போல இருப்பதாக பாஜகவினர் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.

அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு

இந்த பப்பாஞ்சி பொம்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வியாழக்கிழமை போராட்டத்தில் குதித்துவிட்டனர். பப்பாஞ்சி பொம்மையை அகற்றவேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

பாஜகவினர் இப்படி பிரச்சினை செய்வதற்கு அவசியமே இல்லை என்றும் இந்த சர்ச்சை தேவையில்லாதது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதில் அளித்துள்ளனர். இந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

39வது ஆண்டாக இந்த கொச்சி கார்னிவல் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. ஓவியக் கண்காட்சி, மாரத்தான் ஓட்டம், சைக்கிள் பேரணி, உணவுத் திருவிழா, கொங்கணி மொழித் திருவிழா எனப் பல்வேறு விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் இந்தக் கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெறுகின்றன.

டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் பப்பாஞ்சி பொம்மைக்கு தீ வைக்கப்பட்டு, பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். பின்னர் ஜனவரி 1ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு பேரணி ஒன்றும் நடைபெறும்.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை... காவல்துறை அதிரடி உத்தரவு!!

click me!