தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய நாடாளுமன்றம்: திமுகவை டார்கெட் செய்யும் பாஜக அமைச்சர்கள் - என்ன காரணம்?

By Manikanda Prabu  |  First Published Aug 10, 2023, 3:52 PM IST

நாடாளுமன்ற  மக்களவையில் பேசிய பாஜக அமைச்சர்கள் பெரும்பாலும் திமுகவை தாக்கி பேசியது பேசுபொருளாகி உள்ளது


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால் பாஜக அரசு நடுங்குகிறது. எந்தவித மிரட்டல்களுக்கும், பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல திமுக என்று முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் அதேவேளையில், நாடு முழுவதும் தமிழ்நாட்டு பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா முழுமைக்கும் உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் பேசும் மத்திய பாஜக அமைச்சர்கள், திமுகவினரை கடுமையாகத் தாக்கி பேசி வருகின்றனர்.

பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவழைப்பதற்காக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் அனல் பறக்க நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று பேசிய ராகுல் காந்தி மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் எனவும், இந்தியாவை கொன்று விட்டீர்கள் எனவும் ஆவேசமாக பேசினார்.

Tap to resize

Latest Videos

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘ஊழலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான். ஊழலைப் பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவைப் பற்றி பாருங்கள்.’ என்றார். அதன் தொடர்ச்சியாக, பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக மிரட்டல் விடுக்கிறார் என குற்றம் சாட்டினார். ‘உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? நாட்டின் நீதிமன்றங்களை அச்சுறுத்தி கட்டுப்படுத்தி வைத்துள்ளதா பாஜக?’ எனவும் ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தின் மீது பேசிய நிர்மலா சீதாராமனும், திமுகவை கடுமையாக சாடினார். ஹிந்தி, சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ள விடாமல் தமிழ் மொழியை திணித்ததாகவும், தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா அவர்களுடைய சேலையை பிடித்து இழுத்த கட்சிதான் திமுக எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி பாஜகவின் செங்கோல் குறித்து அம்பலப்படுத்தினார். இதுகுறித்தும் பேசிய நிர்மலா சீதாராமன், “நாங்கள் திராவிடர்கள் அல்ல, தமிழர்கள் என சிலப்பதிகாரம் சொல்கிறது. சிலப்பதிகாரம் என்ன சொன்னதோ அந்த வழியில் தான் பிரதமர் மோடி ஆட்சியை நடத்துகிறார். பல தசாப்தங்களாக செங்கோல் புறக்கணிக்கப்பட்டது. மக்களவையில் செங்கோலை அதன் சரியான இடத்திற்கு பிரதமர் மோடி மீட்டெடுத்தபோது, அது ஒரு பிரச்சினையாக மாறியது, இது தமிழர்களை அவமதிக்கும் செயல்” என்றார். 

ஜெயலலிதா சேலையை இழுத்த கட்சிதான் திமுக: மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று பேசிய உரையில் திமுக எதிர்ப்பு மிகக் மிகக் கடுமையாக இருந்தது. அவரது உரையின் பெரும் பகுதி திமுக மீதான விமர்சனமாகவே இருந்தது. மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அதிகம் தாக்கக்கூடிய கட்சியாகவும் திமுக உள்ளது. மற்ற எந்த மாநில கட்சிகளின் பெயர்கள் கூட குறிப்பிடப்படுவதில்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை விட திமுகவைத்தான் பாஜக அமைச்சர்கள் அதிகமாக விமர்சிக்கின்றனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி பாஜகவினர் பலரும் அண்மைக்காலமாக திமுகவையே தாக்கி பேசுகின்றனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போதும், திமுகவை கடுமையாக மத்திய பாஜக அமைச்சர்கள் விமர்சிக்கின்றனர். திமுக பாஜக விவாத அவையாக மக்களவை மாறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் பாஜகவினர் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டை விமர்சிக்கின்றனர்.

இதற்கான காரணம் குறித்து திமுகவினரிடம் பேசியபோது, “கும்மிடிப்பூண்டி தாண்டினால் திமுவை யாருக்கும் தெரியாது என்று சொல்லிட்டு பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் பலர் வரை நாடாளுமன்றத்திலும் சரி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடக்கும் பொதுக் கூட்டங்களிலும் அதிகமாக அதாவது காங்கிரஸை விட, மற்ற எதிர்க்கட்சிகளை விட திமுகவைப் பற்றி அதிகம் விமர்சித்து பேசுகிறார்கள். இதற்கு சமூகநீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு, திமுக. திராவிட மாடல் ஆட்சியின் தாக்கங்களே காரணம். இந்த தாக்கம் எங்கு இந்தியா முழுக்க பரவி விடுமோ என்ற அதன் மீதான பதபதைப்பில் இவ்வாறு பேசுகின்றனர். வட மாநிலங்களில் திராவிட மாடல் குறித்தும், சமூக நீதி குறித்தும் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த அச்சத்தின் வெளிப்பாடே இது.” என்கின்றனர்.

இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அமைந்ததில் முக்கியப் பங்காற்றியவர் முதல்வர் ஸ்டாலின். எனவே அவர்களுக்கு திமுக என்றால் எரிச்சல் வருகிறது. அவர்களது ஆட்டம் விரைவில் முடியப்போகிறது.” என்றார்.

மத்திய அமைச்சர்கள் திமுக குறித்து அதிகம் விமர்சிப்பது பற்றி பாஜகவினர் கூறும்போது, “செங்கோல், எய்ம்ஸ் என எதுவாயினும், திமுகவினர் அவையில் தெரிவித்த கருத்துகளுக்கே அமைச்சர்கள் பதிலடி கொடுக்கின்றனர். ஊழல் பற்றியும், வாரிசு அரசியல் பற்றியும் பேசினாலே அதில் காங்கிரஸும், திமுகவும் முதல் ஆளாக வந்துவிடும். மற்றபடி இதில் ஒன்றுமில்லை. பிரதமர் மோடி பதிலுரையில் உரிய விளக்கம் அளிப்பார். 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. எதிர்க்கட்சிகளின் கூட்டணி நீர்த்துப்போகும்.” என்கின்றனர்.

click me!