பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம்: அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு அழைப்பு!

First Published Sep 17, 2017, 12:44 PM IST
Highlights
bjp Executive Meeting all state mla and mp will come


பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் விரிவடைந்த தேசிய செயற்குழு கூட்டம் வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தின் முன்னாள் தலைவரும் , அக்கட்சிக்கு தத்துவ வழிகாட்டியாகவும் விளங்கும் தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிறைவு விழா வரும் 25-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

விரிவுபட்ட செயற்குழு

இதையொட்டி, பா.ஜ.க. அனைத்து எம்.பி.க்களும் அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கும் விரிவுபட்ட தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்த அக்கட்சி முடிவுசெய்துள்ளது.

இந்த விரிவுபட்ட பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 281 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 56 பேரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.

1,400 எம்.எல்.ஏ.க்கள்

மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சுமார் 1,400 பேரையும் எம்.எல்.சி.க்களையும் இந்த விரிவுபட்ட தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். இதில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்ற உள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவும் உரையாற்றுகிறார்.

வழக்கமாக பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் 200-க்கு உட்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்வர். ஆனால் பா.ஜ.க. கட்சியின் தத்துவ வழிகாட்டியான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஒட்டி அக்கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சி கடைபிடிக்கவேண்டிய தத்துவ வழிகாட்டல் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீனதயாள் உபாத்யாயாவின் தத்துவ வழிகாட்டல்கள் குறித்தும் இக்கூட்டத்தில் எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக 24-ந் தேதி பா.ஜ.க. முக்கிய கட்சி நிர்வாகிகள் கூடி அடுத்த நாள் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்து முடிவு எடுக்க உள்ளனர்.

click me!