
உலக அளவில் வசூலை வாரிக் குவித்த பாகுபலி திரைப்படத்தில் வரும் மகிழ்மதி நகரம் போன்று, ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை அமைக்க இயக்குநர் ராஜமவுலியின் உதவியை முதல்வர் சந்திரபாபு நாடியுள்ளார்.
அமராவதி நகரை உருவாக்கும் பணியில் உள்ள இங்கிலாந்து நிறுவனம் இயக்குநர் ராஜமவுலியிடம் ஆலோசனைகள் கேட்டுக்கொள்ளும்படி முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகுபலி-1, பாகுபலி-2 திரைப்படங்களில் வரும் மகிழ்மதி நகரம் அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டது. இந்த நகரம் போன்று ஆந்திராவின் புதிய தலைநகரம் அமராதியை அமைக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புகிறார்.
புதிய தலைநகர் அமராவதியை அமைக்கும் பணியை லண்டனைச் சேர்ந்த பாஸ்டர்ஸ் மற்றும் பார்ட்னர்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனம் தனது திட்டப்பணியை முடித்து, வரைபடத்தை சமீபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அளித்தது.
அப்போது, கட்டிடத்தின் வடிவமைப்பு, உள்வடிவமைப்பு, உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால், உலகத் தரம்வாய்ந்த அளவுக்கு கட்டிடம் வர வேண்டும் என்று அவர் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தலைநகரை வடிவமைப்பது, அங்கு அமைய உள்ள சில அரசுத்துறைகளின் கட்டிடங்கள், உள்ளிட்டவற்றுக்கு இயக்குநர் ராஜமவுலியின் ஆலோசனையை கேட்கும்படி, லண்டன் நிறுவனத்தை சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக இயக்குநர் ராஜமவுலி விரைவில் லண்டன் சென்று கட்டுமான நிறுவனத்துடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அக்டோபர் 25-ந்தேதி இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் சந்திரபாபு நாயுடு, தலைநகர் வடிவமைப்பின் திட்டத்தை உறுதி செய்கிறார்.
இது குறித்து அமைச்சர்கள் பி. நாராயணா, யனமலா ராம கிருஷ்ணடு கூறுகையில், “ புதிதாக அமையும் தலைநகர் அமராவதியில் இளைஞர்களை அதிகமாக பணியில் ஈடுபட்ட அரசு திட்டமிட்டுள்ளது. கட்டுமானம், கலைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும்’’ என்றனர்.