Bipin Rawath: 2015 ஹெலிகாப்டர் விபத்தில் தப்பிய அதிசயம்.. 2021-இல் உயிரிழந்த சோகம்.. கலங்க வைக்கும் விதிவசம்!

By Asianet TamilFirst Published Dec 8, 2021, 10:47 PM IST
Highlights

விதிவசம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அன்று உயிர்த் தப்பிய பிபின் ராவத், இன்று உயிரிழந்ததை என்னச் சொல்வது?!

கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,  இன்று நடந்த விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. 

குன்னூரில் ராணுவக் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் காட்டேரி மலைப் பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்துமோது ஹெலிகாப்டர்  கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இதற்கு முன்பு ஏற்கனவே இதுபோன்று ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். கடந்த 2015-ஆம் ஆண்டில் லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த பிபின் ராவத், பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி, நாகாலாந்துக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பிய சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் என்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த ஹெலிகாப்டரில் பயணித்த பிபின் ராவத், இரு விமானிகள், ஒரு ராணுவ கர்னல் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதுவும் லேசான காயங்களுடன் பிபின் ராவத் உயிர் தப்பினார். ஆனால், குன்னூரில் அதுபோன்ற ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இன்று பிபின் ராவத் உயிரிழந்தார். விதிவசம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அன்று உயிர்த் தப்பிய பிபின் ராவத், இன்று உயிரிழந்ததை என்னச் சொல்வது?!

click me!