பெண் வீட்டார் மாப்பிள்ளைகளை கடத்தி சென்று திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் அடிக்கடி நடைபெறும் சம்பவமாக இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் கால்நடை மருத்துவரை அழைத்து, கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கால்நடை மருத்துவர்:
“நள்ளிரவு 12 மணிக்கு விலங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கால்நடை மருத்துவர் அழைக்கப்பட்டார், இதன் பின் மூன்று பேர் சேர்ந்து கால்நடை மருத்துவரை கடத்தி சென்றனர். கால்நடை மருத்துவர் நீண்ட காலம் ஆகியும், திரும்பாததை அடுத்து அவரது குடும்பத்தார் காவல் நிலையம் விரைந்தனர்,” என்று கால்நடை மருத்துவரின் உறவினர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
“கால்நடை மருத்துவரின் தந்தை காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார். நாங்கள் எஸ்.ஹெச்.ஓ. மற்றும் இதர அதிகாரிகளிடம் விசாரணையை உடனே துவங்க உத்தரவிட்டு இருக்கிறோம். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என பெகுசரை எஸ்.பி. யோகேந்திர குமார் தெரிவித்து இருக்கிறார்.
வலுக்கட்டாய திருமணம்:
பெண் வீட்டார் மாப்பிள்ளைகளை கடத்தி சென்று திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் அடிக்கடி நடைபெறும் சம்பவமாக இருக்கிறது. அதிக ஊதியம், சொத்து வைத்திருக்கும் திருமணம் ஆகாத ஆண்களை கடத்திச் சென்று கத்தி, துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலத்தில் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது.
அதில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் பணியாற்றும் ஜூனியர் மேலாளர் 29 வயதான வினோத் குமார், பாட்னாவில் உள்ள பாண்டராக் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். வினோத் குமார் திருமண சடங்குகளின் போது, திருமணத்தை நிறுத்த அழுது புலம்பும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.