104 மணி நேரங்கள்... 500 பேரின் உழைப்பு... ஆழ்துளை கிணற்றில் இருந்து 11 வயது சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

By Kevin KaarkiFirst Published Jun 15, 2022, 10:58 AM IST
Highlights

முன்னதாக  2006 ஆம் ஆண்டு இதே போன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 50 மணி நேர போராட்டத்தை அடுத்து மீட்கப்பட்டான். 

சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாங்கிர் சாம்பா மாவட்டத்தை சேர்ந்த 11 வயதான ராகுல் சாஹூ என்ற சிறுவன் கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். சுமார் 80 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீடகும் பணிகள் உடனடியாக துவங்கின. 

மகோரடா டெவலப்மெண்ட் பிளாக்கில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டு இருந்த ராகுல் சாஹூ ஜூன் 10 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். 11 வயதான ராகுல் சாஹூ சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான். 

இவனை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், ராணுவம், போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் அடங்கிய சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. மீட்பு பணிகள் மொத்தம் 104 மணி நேரங்கள் நடைபெற்றது. 

நீண்ட நேர மீட்பு பணி:

சிறுவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பின், அவர்களை மீட்க நடைபெற்ற மிக நீண்ட மீட்பு நடவடிக்கை இது ஆகும். முன்னதாக  2006 ஆம் ஆண்டு இதே போன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 50 மணி நேர போராட்டத்தை அடுத்து மீட்கப்பட்டான். இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தின் குருக்‌ஷேத்திராவில் நடைபெற்றது. 

சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்து மீட்பு பணிகளில் நேரடி கவனம் செலுத்தி வந்த சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து அவ்வப் போது ட்விட்டரில் தகவல் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் ராகுல் சாஹூ மீட்கப்பட்டது அனைவருக்கும் நிம்மதி அடைய செய்து இருக்கிறது. 

முதல்வர் மகிழ்ச்சி:

“அனைவரின் பிரார்த்தனை, மீட்பு படையினரின் தொடர் முயற்சி மற்றும் அதிரடி நடவடிக்கைகள் மூலம் ராகுல் சாஹூ பத்திரமாக மீட்கப்பட்டான். அவன் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டுகிறேன்,” என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

“அவனின் உடல் நிலை சீராக உள்ளது, அவன் விரைவில் நலம்பெற வேண்டும். அவனை பில்சாபூர் மாவட்டத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறான். அங்கு மருத்துவ நிபுணர்கள் அவனின் உடல்நிலை பற்றி கண்காணிக்க உள்ளனர். ராகுல் சாஹூவை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுமார் 100 கிலோமீட்டர்கள் வரை போக்குவரத்து சீர் செய்யப்பட்டு இருக்கிறது,” என பில்சாபுர் கலெக்டர் ஜிதேந்திர ஷூக்லா தெரிவித்து இருக்கிறார்.

click me!