
பீகார் முதல்வர் நிதீஷ் குமாரைவிட அவரது மகனின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பா.ஜனதா -ஐக்கிய ஜனதா தள கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் உள்ளார். இவரது அமைச்சரவையில் பா.ஜ.வைச் சேர்ந்த துணை முதல்வர்சுஷில் குமார் மோடி, உள்பட 27 அமைச்சர்களும் தங்களது அசையும், அசையா சொத்து கணக்கை வெளியிட உத்தரவிடப்பட்டிருந்தது.
இதில் முதல்வர் நிதிஷ் குமாரின் அசையும் , அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.56.23 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.16.23 லட்சம் அசையும் சொத்துக்களும், ரூ.40 லட்சம் மதிப்பிலான வீடு டெல்லியில் ஆயிரம் சதுர அடியில் இருக்கிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நிதிஷ் குமாரின் சொத்துமதிப்பு ரூ.26 ஆயிரம் குறைந்துள்ளது. நிதிஷ் குமாரிடம் போர்ட் எஸ்கார்ட், ஹூன்டாய் கிராண்ட் ஆகிய 2 கார்களும் உள்ளன. மேலும், சொந்தமாக 9 பசுக்களும், 7 கன்றுகளும், வாகனக் கடனா ரூ.43 ஆயிரத்து 458 ஆகவும் இருக்கிறது.
நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்துக்கு தனது தந்தையைக் காட்டிலும் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகமாகும். இவரின் சொத்துமதிப்பு ரூ.2.43 கோடியாகும். இவருக்கு அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.1.18 கோடியும், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.1.25 கோடியும் உள்ளது.
மேலும், தங்களின் பரம்பரை நிலம், நாளந்தா மாவட்டத்தில் கல்யான்பிகா நகரிலும், பாட்னா மாவட்டத்தில்பக்தியார்பூர் நகரில் இரு வீடுகள் சொந்தமாக உள்ளன. மேலும், தபால்நிலை சேமிப்பு கணக்கு, தனது மறைந்த தாய் பெயரிலான நகைகள் உள்ளிட்டவை உள்ளன.
அதே சமயம், துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் சொத்து மதிப்பு நிதிஷ் குமாரைக் காட்டிலும் அதிகரித்து, ரூ.94.92 லட்சமாக இருக்கிறது. ரூ.46.54 லட்சம் வங்கி டெபாசிட்டும், ஒரு மாருதி ஸ்விப்ட் காரும் , ரூ.2.94 லட்சம் மதிப்பிலான நகைகளும் உள்ளன.
சுஷில் குமார் மோடியின் மனைவியின் சொத்துமதிப்பு ரூ.1.35 கோடியாகும். அதில் வங்கி டெபாசிட்டாகரூ.73.28 லட்சமும், நகைகள் மதிப்பு ரூ.12.60 லட்சமும் அடங்கும். இவர்களுக்கு சொந்தமாக ரூ.33.73லட்சத்தில்கவுதம்புத் நாகர் மாவட்டத்தில் சொந்த வீடு இருக்கிறது. வங்கியில் சுஷில் குமார் பெற்ற கடனில் ரூ.16 லட்சம் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கிறது.