பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு: அடுத்த கூட்டம் எங்கே?

Published : Jul 18, 2023, 04:35 PM IST
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு: அடுத்த கூட்டம் எங்கே?

சுருக்கம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது

பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில்  உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

அந்த கூட்டத்தின் முடிவில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த கூட்டம் இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஒற்றுமைக் கூட்டம் நேற்றும், இன்றும் என இரு அமர்வுகளாக நடைபெற்றது.

கடந்த முறை போன்று அல்லாமல் இந்த முறை மேலும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 26 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை! எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே திட்டவட்ட அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு (I.N.D.I.A - Indian National Democratic Inclusive Alliance) என இந்திய தேசிய ஜனநாயக ஐக்கிய கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதிபடுத்தியுள்ளார். இந்திய தேசிய ஜனநாயக ஐக்கிய கூட்டணியின் அடுத்த கூட்டமான 3ஆவது கூட்டம் மும்பையிலும், 4ஆவது கூட்டம் தமிழ்நாட்டிலும் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பாஜவின் செயல்திட்டம் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்றார். ஆளுநருக்கு அதிகமான அதிகாரங்களை கொடுத்து, சட்டத்தில் இல்லாத அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டு பாஜக ஆளாத மாநிலத்தில் ஆளுநர்கள் சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்கள் எனவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!