
“மொபைல் சேவையை போல் வங்கி சேவையை மாற்றலாம்…” - ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம்…
மொபைல் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவன சேவைக்கு மாற்றுவது போல, வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வேறு வங்கி சேவைக்கு மாறும் வசதி விரைவில் அமல்படுத்தப்பட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மொபைல் எண் வைத்திருப்பவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவன சேவையில் குறை இருந்தால் வேறு நிறுவனத்துக்கு மாற தயக்கம் காட்டி வந்தனர்.
இதற்கு, மொபைல் எண் மாறிவிடும் என்பதே காரணமாக இருந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் எம்என்பி எனப்படும் மொபைல் எண்ணை வேறு நிறுவன சேவைக்கு மாற்றும் வசதியை மத்திய தொலை தொடர்பு துறை கொண்டு வந்தது. இதே வசதியை வங்கி சேவையிலும் அளிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முத்ரா கூறியதாவது….
வங்கி வாடிக்கையாளர் தனது கணக்கு எண்ணை வேறு வங்கி சேவைக்கு மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறது. டிஜிட்டல் வங்கி சேவை இதை சாத்தியமுள்ளதாக ஆக்கும். வங்கி பரிவர்த்தனையை எளிதாக்க பீம், ஐஎம்பிஎஸ், யுபிஐ சார்ந்த மொபைல் ஆப்ஸ்களை தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் வடிவமைத்துள்ளது.
இதுபோல் வங்கி கணக்கு எண்ணை வேறு வங்கி சேவைக்கு மாற்றுவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த வசதியை அளிக்க இந்திய வங்கிகள் சங்கத்திடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார். கடந்த 2012 ஆண்டிலேயே வங்கிகளுக்குள் கணக்குகளை மாற்ற அனுமதிப்பது தொடர்பான அறிவிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
ஆனால், இவ்வாறு மாற்றுவது பெரும் நடைமுறை சிக்கலை ஏற்படுத்திவிடும் வங்கிகளுக்குள் பெரும் தொழில்போட்டி உருவாகும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது ஆதார் அடிப்படையில் அனைத்து பரிவர்த்தனையையும் மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆதார் அடிப்படையில் வங்கி கணக்கு எண் மாற்றும் வசதி கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து யுஐஏஐ துணை இயக்குநர் ஜெனரல் சம்மேஷ் ஜோஷி கூறுகையில், வங்கி கணக்கு மாற்றும் வசதியில் ஆதார் நிரந்தர நிதி முகவரியாக கொள்ளப்படும் என்றார்.