
சென்னை, பாட்னா உள்ளிட்ட 6 விமானநிலையங்களில் வரும் ஜூன் 1-ந்தேதியில் இருந்து உள்நாட்டு முனையத்தில் பயணிகள் தங்களுடன் எடுத்து செல்லும்ஹேண்ட் பேக்களுக்கு பாதுகாப்பு முத்திரையிடத் தேவையில்லை என்ற முறை நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவர் ஓ.பி. சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது-
தேவையில்லை
ஜூன் 1-ந்தேதி முதல் சென்னை, பாட்னா, லக்னோ, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர்,கவுகாத்தி ஆகிய 6 நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் உள்நாட்டளவில் பயணிக்கும் பயணிகள் தங்களுடன் எடுத்துவரும் ஹேண்ட் பேக்களுக்கு பாதுகாப்பு முத்திரை இடப்படாது. இந்த நடவடிக்கை சில வாரங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
ஏற்கனவே
விமானநிலையங்களில் போதுமான அளவுக்கு கண்காணிப்பு கேமிராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை செய்யப்பட்டபின், இந்த முறை நடைமுறைக்கு வர உள்ளது. இந்த முறையை ஏற்கனவே டெல்லி, மும்பை, கொச்சின், பெங்களூரு,ஐதராபாத், கொல்கத்தா, அமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறை படுத்திவிட்டோம்.
கெடுபிடிகள் இருக்காது
அடுத்த கட்டமாக வாரணாசி, புனே, கோவா, புவனேஷ்வர், விசாகப்பட்டிணம் ஆகிய நகர விமானநிலையங்களில் இந்த முறை பின்பற்றப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து உள்நாட்டு விமான முனையங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும். இந்த புதிய முறையால், பயணிகள் தொந்தரவு இல்லாத பாதுகாப்பு முறையையும், சூழலையும் உணரமுடியும்.
இந்த புதிய முறை உள்நாட்டு விமான நிலையங்களில் மட்டுமே பொருந்தும். சர்வதேச விமானநிலைய முனையத்தில் வழக்கம் போல் ஹேண்ட் பேக்குகளை முத்திரையிட்டு செல்ல வேண்டும் ’’ எனத் தெரிவித்தார்.
புகார்
உள்நாட்டு விமானநிலைய முனையங்களில் பயணிகள் தங்களுடன் எடுத்து வரும் ஹேண்ட்பேக்குகளில் எந்தவிதமான ஆயுதங்கள், துப்பாக்கி போன்ற வெடிபொருட்கள் ஏதும் இல்லை என்பதை பாதுகாப்பு பணியாளர்கள் உறுதி செய்தபின் அதற்கு சீல் வைத்து, விமானத்தில் ஏற அனுமதிப்பார்கள்.
இதனால், ஒவ்வொருவரின் ஹேண்ட்பேக்களுகளையும் சோதிக்க அதிக நேரத்தை பாதுகாப்பு பணியாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், சில நேரங்களில் பயணிகள் பாதுகாப்பு முத்திரைகள் இடாமல் விமானத்துக்கு வந்துவிட்டால், முத்திரையிட்டபின் அனுமதிப்போம் என பாதுகாப்பு பணியாளர்கள் கூறுகின்றனர்.
நவீன கேமிரா, எக்ஸ்ரே கருவி
இதைத் தவிர்க்கவே இந்த புதிய முறை கொண்டு வரப்படுகிறது. இதற்காக இப்போது, ஸ்மார்ட் கேமிரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்ரே எந்திரத்தில் ஹேண்ட் பேக்குகளை வைத்தவுடன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் தௌிவாக அறியும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகத்திடமான பொருட்கள் இருந்தால், அந்த ஹேண்ட்பேக் தனியாக ஒதுங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் விரைவாக தங்களின் ஹேண்ட்பேக் சோதனைகளை முடித்து, முத்திரைக்காக காத்திருக்காமல் விமானத்தை அடைய முடியும்.