
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கடந்த 15ம் தேதி முதல் கல்லூரி மாணவர்களின் தொடர் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய அரசிடம் பேசி, ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிக அவசர சட்டம் பிறப்பித்தார். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை யில்லா சட்டம் வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் திண்டுக்கல், அலங்காநல்லூர், கோவை, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் விரட்டியடித்தனர்.
இந்நிலையில், கர்நாடக மக்கள், பெங்களூரில் இருந்து ஓசூர் வந்து, தமிழர்களுக்கு ஆரதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கூறி, ஓசூர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழக – கர்நாடக எல்லையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் காவிரி தண்ணீர் தர மறுத்த கன்னடர்கள், இன்று தமிழர்களின் பாரிம்பரியத்தை விட்டு கொடுக்க முடியாது என ஆதரவு கரம் நீட்டி போராட்ட களத்தில் குதித்துள்ள சம்பவம்,இந்தியர்களை ஒன்று திரட்டும் வகையில் உள்ளது.