
செய்தித்தாள்களில் உணவுப்பொருட்கள், எண்ணெயில் பொறித்த பொருட்கள் உள்ளிட்டவற்றை மடித்து கொடுப்பது, மக்களின் உடல்நலத்துக்கு கேடுவிளைக்கும் என்று கூறி அதற்கு தடைவிதித்து இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலும் செய்தித்தாள்களை அதிகமாக டீ கடைகள், சிறு மளிகை கடைகள், சிறி சிற்றுண்டிக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி அங்கு செய்தித்தாள்களை பொட்டலம் மடித்துக் கொடுக்க பயன்படுத்த முடியாது.
இது குறித்து மாநில, யூனியன் பிரேதச உணவுப்பாதுகாப்பு ஆணையர்களுக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய உணவுத் தரக்கட்டுப்பாடு அமைப்பு, இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து, செய்தித்தாளில் உணவுப்பொருட்கள் மடித்துக்கொடுக்கும் முறையை தடை செய்யக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து இந்திய உணவுப்பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ செய்தித்தாள்களில் உணவுப்பொருட்களை பொட்டலமாக கட்டிக் கொடுத்தல் கூடாது. பரிமாறவும்கூடாது. அப்படி கொடுக்கும் போது, உணவுப்பொருட்களில் உள்ள எண்ணெயை அந்த செய்தித்தாள்கள் உறிஞ்சிவிடும் என நினைத்து சிலர் பயன்படுத்துகிறார்கள்.
அப்படி செய்தித்தாள்களில் உணவுப்பொருட்களை மடித்துக்கொடுப்பதால், செய்தித்தாள்களில் உள்ள மை, ரசாயனப் பொருட்கள், ஆகியவை உணவுப்பொருட்களில் கலந்து சாப்பிடுவோரின் உடல்நலத்துக்கு கடும் தீங்கு விளைவிக்கும்.
இந்த அபாயகரமான பயன்பாட்டை குறைக்க உடனடியாக, உணவு தயாரிப்போர், சிறு கடை வைத்திருப்போர், டீகடைகள் வைத்திருப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
செய்தித்தாள்களில் அச்சடிக்க பயன்படுத்தப்படும் ரசாயன கலவை கலந்த மை, நச்சுத்தன்மை கலந்த மை, வாசனைப் பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள் போன்றவைகள் உணவுப்பொருட்கள் மூலம் உறிஞ்சப்பட்டு உடலுக்குள் படிப்படியாக சென்று நாளடைவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக முதியோர்கள், இளம்வயதினர், குழந்தைகளின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் சூழல் பிற்காலத்தில் ஏற்படும், உடலின் நோய்எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
செய்தித்தாள்களை பயன்படுத்தி உணவுப்பொருட்களை மடித்துக்கொடுப்போர் மீது நடவடிக்கை, அபராதம், தண்டனை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தாத நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.