அதிமுகவில் பிளவு ஏற்படுமா...? வெங்கய்யா நாயுடு பரபரப்பு பேட்டி

First Published Dec 10, 2016, 9:15 AM IST
Highlights


தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து பேசுவதற்கு காலம் இன்னும் வரவில்லை என மத்திய அமைச்சர் எம்.வெங்கய்யா நாயுடு கூறினார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வரும், அதிமுகவின் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு சில நாட்களே ஆனதால் தமிழகத்தில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பேசுவது சரியல்ல. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றே கூற வேண்டும்.

தமிழகத்தில் தற்போதைக்கு யாருடனும் புதிய கூட்டணி அமைக்கப் போவதில்லை. அதேபோல ஏற்கெனவே உள்ள கூட்டணியை மாற்றியமைக்கவும் இல்லை. இன்னும் சில காலம் காத்திருப்போம்.  கொள்கை அளவில் ஓரளவுக்கு பாஜகவும், அதிமுகவும் ஒத்துப்போக கூடியவை என்பதை குறிப்பிடுவதற்காகவே பாஜகவின் இயல்பான தோழமைக் கட்சி அதிமுக என்று நான் கூறினேன்.

ஒருசில விவகாரங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளதோடு, ஒருசில விவகாரங்களில் மத்திய அரசை விமர்சித்தும் வந்துள்ளது. அதிமுகவுடன் பாஜக தேர்தல் கூட்டணி வைத்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா? என இப்போதைக்கு கூற இயலாது. 

கூட்டணி குறித்து முடிவெடுக்க தாராளமாக கால அவகாசம் உள்ளது. எனவே, கூட்டணி குறித்து இப்போது விவாதிப்பது சரியல்ல. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்படுமா? என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது என்றார்.

click me!