"நான் பேசினால் நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும்" - பொங்கிய ராகுல் காந்தி

First Published Dec 10, 2016, 9:28 AM IST
Highlights


ரூபாய் நோட்டு விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்து இருப்பதாக கூறிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அது குறித்து தன்னை பேச அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று கூறினார் .

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது-

பயப்படும் அரசு

‘‘ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் விரும்புகிறது. அப்போதுதான் உண்மை வெளிவரும். ஆனால், மத்திய அரசு, விவாதத்துக்குப் பயந்து ஓடுகிறது.

எனக்கு ஒருமுறை ரூபாய்நோட்டு விவகாரத்தில பேச வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது பிரதமரால் அவையில் உட்கார கூட முடியவில்லை. நாடு முழுவதும் சென்று பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால், நாடாளுமன்றத்துக்கு வரவும், அங்கு வந்து அமரவும் பயப்படுகிறார்.

இந்திய வரலாற்றில்..

அவருடைய இந்த நடுக்கத்திற்குக் காரணம் என்ன?. இந்திய வரலாற்றில் இந்த ரூபாய் நோட்டு விவகாரம் மிகப்பெரிய ஊழலாக அமைந்துள்ளது.

அது குறித்து நான் மக்களவையில் பேச விரும்புகிறேன். அங்கு அனைத்து விவரங்களையும் நான் வெளியிடுவேன். ஆனால், இந்த விவகாரத்தில் என்னைப் பேசுவதற்கு அரசு அனுமதிப்பது இல்லை.

ஏழைகளின் குரல்

தொடக்கத்தில் மத்திய அரசு கருப்பணத்தைப் பற்றி பேசி வந்தது. பின்னர் கள்ள நோட்டுகள் குறித்து பேசிய அரசு, இப்போது ரொக்கப் பணம் இல்லாத சமூகம் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறது.

இந்த மிகப் பெரிய ஊழலை, பிரதமர் மோடி மட்டுமே தன்னந்தனியாக செய்து இருக்கிறார் என்பதை நான் சொல்ல இருக்கிறேன். இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறிப்பாக ஏழை மக்களின் குரலை பிரதிபலிக்க இருக்கிறேன்.

பூகம்பம் வெடிக்கும்

பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும். அப்போதுதான் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பயன் அடைந்தது யார், என்பது போன்றவை குறித்து விவாதிக்க முடியும்.

என்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளித்தால், அங்கு ஒரு ‘பூகம்பம்’ வெடித்துக் கிளம்புவதை நீங்கள் பார்க்கலாம்’’.

இவ்வாறு ராகுல் கூறினார்.

click me!