
சுரங்க உரிம முறைகேடு வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமிக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துவிட்டது.இதனால், எந்த நேரமும் அவர் கைது செய்யப்படும் சூழல் நிலவியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஐக்கியஜனதா தளம் பா.ஜனதா கூட்டணி கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தது. அப்போது, முதல்வராக குமாரசாமி பதவி வகித்தார். இவரின் பதவிகாலத்தில், தனியார் சுரங்க நிறுவனமான ஜந்தாகல் நிறுவனத்துக்கு சுரங்கத்தை லீசுக்கு விடும் உரிமையை தனது அதிகாரத்தை கொண்டு புதுப்பித்துக் கொடுத்தார் என லோக் ஆயுக்தா குற்றச்சாட்டியது.
மேலும், இந்த சுரங்க உரிமமுறைகேடு தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு ஜன்தாகல் நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் கோயல் கைது செய்யப்பட்டார்.
மேலும் இது தொடர்பாக கடந்த மாதம், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கங்கா ராம் பதேரியாவை போலீசார் கைது செய்தனர். இந்த அதிகாரிக்கு குமாரசாமி அதிக நெருக்கடி கொடுத்து, அந்த தனியார் நிறுவனத்துக்கு 40 ஆண்டுகள் சுரங்கஉரிமை வழங்க நிர்பந்தத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை குமாரசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த மாதம் இந்த வழக்கு தொடர்பாக குமாரசாமி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் அளித்தது.
இந்நிலையில், மீண்டும் முன்ஜாமீன் கேட்டு குமாரசாமி தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, குமராசாமிக்கு முன்ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டார். லோக்ஆயுக்தா விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்றும், நீதிமன்ற அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால், லோக்ஆயுக்தா சிறப்பு விசாரணை போலீசார் எந்த நேரமும் எச்.டி. குமாரசாமியை கைது செய்வார்கள் எனத் தெரிகிறது.