ஒன்றரை மாதக் குழந்தை கொரோனாவிற்கு பலி..! டெல்லியில் பரிதாபம்..!

By Manikandan S R SFirst Published Apr 19, 2020, 3:08 PM IST
Highlights

பல மாநிலங்களில் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனாவிற்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 15,712 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 507 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 27 பேர் பலியாகி உள்ளனர்.

பல மாநிலங்களில் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனாவிற்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த குழந்தையை ஏப்ரல் 14ம் தேதி சிகிச்சைக்காக குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை 16ம் தேதி பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அண்மையில் தெரிய வந்தது. அதன் காரணமாகவே குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அதே மருத்துவர் மற்றும் செவிலியர் சிகிச்சை அளித்த மற்றொரு குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர் மற்றும் செவிலியருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

click me!