அயோத்திக்கு தினமும் சுமார் 3 லட்சம் பேர் வந்து செல்வதற்கு ஏற்ப நகரத்தில் ரூ.85,000 கோடி முதலீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவை அடுத்து, அயோத்திக்கு தினமும் சுமார் 3 லட்சம் பேர் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்பட நகரத்தில் ரூ.85,000 கோடி முதலீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. இப்பணிகளை அடுத்த 10 ஆண்டுகளில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 1,200 ஏக்கர் பரப்பளவில் ஒரு தனி புதிய பசுமை நகரம் உருவாக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.2,200 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும். இந்த பசுமை நகருக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு ஆன்மீகம், கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அயோத்தி உலகளாவிய சுற்றுலாத் தலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக நகரில் மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்த இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தி மேம்பாட்டு ஆணையப் பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றிற்காக 875 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
அயோத்திக்கான இந்த தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்கியுள்ள கட்டிடக் கலைஞர் திக்ஷு குக்ரேஜா, 21ஆம் நூற்றாண்டில் உலகத்தரம் வாய்ந்த நகரத்தில் இருக்கவேண்டிய அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கியதாகவும், நகரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதாகவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.
"அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் சரியான சமநிலையைப் பேணுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. தற்காலிகமாக வந்து செல்பவர்களால் நகரில் நிரந்தரமாகக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாது என்பதுதான் அயோத்தியை பெரும்பாலான நகரங்களில் இருந்து வேறுபடுத்துகிறது” என்றும் அவர் கூறுகிறார்.
ராமர் கோவில் முழுவதுமாக முடிக்கப்பட்ட பிறகு, அயோத்தி நகரில் 1:10 என்ற விகிதத்தில் சுற்றுலாப் பயணிகள் இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. உருவாகவுள்ள பசுமை நகரில் விருந்தினர் மாளிகைகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் ஆகியவை அமைய உள்ளன.
நகரத்தின் பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாத்தல், நகரப் பகுதி மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை மறுசீரமைத்தல் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும். சரயு நதியின் கரையோடப் பகுதிகளை மேம்படுத்துவதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இத்திட்டத்தில் போதுமான வசதிகளுடன் மூன்று சுற்றுச் சாலைகளும் (பரிக்கிரமா மார்க்) மேம்படுத்தப்பட உள்ளன.
ரூ. 240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..