அயோத்தியில் ராமருக்கு கும்பாபிஷேகம்; கர்நாடகா மாநில அரசு திடீர் புது உத்தரவு!!

By Dhanalakshmi G  |  First Published Jan 8, 2024, 2:05 PM IST

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும்போது, கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் முதல் கட்டப் பணிகள் முடிந்து, வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த விழாவை முன்னின்று நடத்தி சிறப்பிக்க இருக்கிறார். பக்தர்கள் கோவிலுக்கு எளிதாக வரும் வகையில் விமான நிலையம், ரயில் நிலையம் தயார் நிலையில் உள்ளன. பக்தர்கள தங்குவதற்கும் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் 34,000 கோவில்களில் கும்பாபிஷேகம் அன்று சிறப்பு பூஜைகள் செய்வதற்கு மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதற்கான சுற்றறிக்கை அனைத்து கோவில்களுக்கும் அனுப்பப்பட்டு இருப்பதாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில் ராமலிங்க ரெட்டி தெரிவித்து இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நுழைவு விதிகள், ஆரத்தி நேரம்.. மேலும் பல முக்கிய தகவல்கள் இதோ..

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 12.29 மணியளவில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் அதாவது 12.29 மணியில் இருந்து 12.30 மணிக்குள் மகா மங்கள ஆரத்தி செய்ய வேண்டும் என்று கோவில்களுக்கு அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ''அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் கர்நாடகா மாநிலத்தில் அரசின் கீழ் வரும் அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும்'' என்று எக்ஸ் தளத்திலும் அமைச்சர் ராமலிங்கம் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பிஒய் விஜயேந்திரா கூறுகையில், ''ராமர் கோவிலுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்த காங்கிரஸ் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது. கர்நாடகா மக்கள் ராமர் மீது நம்பிக்கையும், பக்தியும் வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துள்ளனர். ஜனவரி 22 அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, மாநிலத்தில் இந்து சமய அறநிலையத்தின் கீழ் வரும் அனைத்துக்கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் 1992, டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இந்துத்துவாஅமைப்பைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பூஜாரி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதற்கு மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்து இருந்தது. இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஹூப்ளி போலீசார் 50 வயது பூஜாரியை கைது செய்து இருந்தனர். பாபர் மசூதி இடிப்பின்போது அவரது வயது 20. ஹூப்ளியில் அப்போது வன்முறை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் உடனடியாக கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நேரலையில் ஒளிபரப்பும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்!

இதேபோல், ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கர்நாடகாவில் கோத்ரா போன்ற சம்பவம் திட்டமிடப்படலாம் என்று கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் பி கே ஹரிபிரசாத்தை கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்து இருந்தது. அதே நேரத்தில் மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, ''காங்கிரஸ் அரசு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு அனுமதிக்காது'' என்று உறுதியளித்துள்ளார்.  

click me!