அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களின் நம்பிக்கை உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அலுவலகத்தை அரை நாள் மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை விழா இந்தியா முழுவதும் 22 ஜனவரி 2024 அன்று கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 22, 2024 அன்று 2.30 மணி மூடப்படும். இது தொடர்பான உத்தரவு அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் :
ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு, ராமர் கோயிலின் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து தரப்பு உயரதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவுக்கான 7 நாள் சடங்குகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சடங்குகள் செய்யப்படுகின்றன.
இதனிடையே இந்திய பார் கவுன்சில் வரும் 22-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் “ அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் ஜனவரி 22, 2024 அன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மகத்தான மத, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கனவை நனவாக்கும் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. நாட்டின் கட்டமைப்பை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!
முன்னதாக இன்று பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் வரலாறு மற்றும் வரலாற்றுத் தருணங்களை விளக்கும் வகையில் ராமர் கோயிலின் நினைவு தபால் தலைகளை வெளியிட்டார்.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய சடங்குகளின் இரண்டாவது நாளான நேற்றிரவு ராமர் சிலை கோவில் வளாகத்தை வந்தடைந்தது. இது கருவறைக்குள் வைக்கப்பட்டுள்ளது ஆனால் இன்னும் நிறுவப்படவில்லை. சடங்குகளின் மூன்றாம் நாளான வியாழன் அன்று, 'ஜலதிவாஸ்' சடங்கின் ஒரு பகுதியாக, சிலையை தண்ணீரில் தூய்மைப்படுத்தும் சடங்கு நடைபெறும். தொடர்ந்து 'கணேஷ் பூஜை' மற்றும் 'வருண பூஜை' நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.