அலிகரில் செய்யப்பட்ட 400 கிலோ பூட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இந்த விழாவில் நாட்டின் முக்கிய விஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோயில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் சடங்குகள் கடந்த 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக குழந்தை ராமரின் சிலை கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும், கோயிலின் புதிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனிடையே ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்காக பிரதமர் மோடி 11 நாள் கடும் விரதத்தை மேற்கொண்டு வருகிறார். தரையில் தூங்கியும், இளநீர் மட்டுமே குடித்தும் அவர் விரதத்தை அனுசரித்து வருகிறார்.
அயோத்தி ராமர் கோயில் போலி பிரசாதம்.. அமேசான் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு பல தனித்துவமான பரிசுகளை அனுப்பி வருகின்றனர். லட்டு, வெல்லம், குங்குமம் மற்றும் பூட்டு, ஊதுவத்தி, சீதா தேவிக்கு பிரம்மாண்ட புடவை என பல பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்து மகா சபா சார்பில் 400 கிலோ எடை கொண்ட பூட்டு ராமர் கோயிலுக்கு பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்து மகாசபாவின் தேசிய செயலாளர் மகாமண்டலேஷ்வர் டாக்டர் அன்னபூர்ணா பார்தி, அலிகரில் செய்யப்பட்ட 400 கிலோ பூட்டுடன் ராமர் மந்திர் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்வதற்காக அயோத்திக்கு நேற்று புறப்பட்டார்.
400 கிலோ எடையுள்ள பூட்டை வாகனத்தில் வைக்க கிரேன் வரவழைக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி ஷர்மா என்ற வயதான தம்பதியால் பூட்டு செய்யப்பட்டது. சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார், அயோத்தி ராமர் கோயிலுக்கு பூட்டு பரிசாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் அவரின் கடைசி ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று மத்தியப் பிரதேசத்தின் மகாகாலேஷ்வர் கோவிலில் இருந்து ஐந்து லட்சம் லட்டுகள் பேக் செய்யப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு லட்டுகளும் சுமார் 50 கிராம் எடையுள்ளதாகவும், மொத்த சரக்கு 250 குவிண்டால்களாகவும் இருக்கும் என்று கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.