
இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டுத் திட்டமான 'ஆக்சியம் மிஷன் 4' ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 10ம் தேதிக்கு பதிலாக ஜூன் 11ம் தேதி விண்வெளி வீரர்களுடன் ஆக்ஸியம் 4 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறக்க இருக்கிறது. மொத்தம் 4 விண்வெளி வீரர்களில் இந்தியாவின் குரூப் கேப்டன் சுபாஷு சுக்லாவும் ஜூன் 11ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணிக்கிறார். 1984ல் ராக்கேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்திய விண்வெளி வீரர் சுபாஷு சுக்லா என்பது இந்தியாவிற்கு பெருமைக்குரிய தருணமாகும்.
'ஆக்சியம் மிஷன் 4'பயணம் ஒத்திவைப்பு
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவுதலை ஜூன் 10ஆம் தேதி மதியம் 3:45 மணிக்கு IST நேரத்தில் யூடியூப் நேரலையில் காணலாம் என்றும், மாலை 5:52 மணிக்கு ஏவுதல் நடைபெறும் என்றும் இஸ்ரோ தனது சமூக ஊடக தளமான எக்ஸில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக, இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஆக்ஸ்-4 திட்டத்தின் ஏவுதல் ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் எக்ஸில் பதிவிட்டுள்ளார். ஏவுதல் ஜூன் 11ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.
கேப்டன் சுபாஷு சுக்லா
ஆக்சியம் ஸ்பேஸ் வெளியிட்ட வீடியோவில், ராக்கேஷ் சர்மாவின் கதைகளைக் கேட்டு வளர்ந்ததாகவும், வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பறப்பது தனது கனவு என்றும், இப்போது விண்வெளிக்குச் செல்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும் குரூப் கேப்டன் சுபாஷு சுக்லா கூறினார். இந்த தருணம் தனக்கு ஒரு அதிசயம் போன்றது என்றும், இந்த திட்டம் தனக்கு வெறும் விண்வெளிப் பயணம் மட்டுமல்ல, நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சி என்றும் அவர் கூறினார்.
ஆக்ஸ்-4: ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம்
ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஆக்ஸ்-4 திட்டம், இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரிய விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பவுள்ளது. இந்த திட்டத்தில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.
குரூப் கேப்டன் சுபாஷு சுக்லா (இந்தியா) – திட்ட விமானி
ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (போலந்து) – ESA திட்ட விண்வெளி வீரர்
டிபோர் கபு (ஹங்கேரி) – தேசிய விண்வெளி வீரர்
பெக்கி விட்சன் (USA) – திட்ட தளபதி, விண்வெளியில் அதிக நேரம் தங்கியிருந்த பெண் என்ற சாதனை படைத்தவர்