
Delhi Court Allows Tahawwur Rana To Speak To Family Over Phone: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணா தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேச டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் ராணா ஒரு முறை மட்டுமே கனடாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச வழக்க விசாரித்த சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங் அனுமதி அளித்துள்ளார்.
குடும்பத்தினருடன் போனில் பேச ராணாவுக்கு அனுமதி
சிறை விதிகளின்படியும், திகார் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பிலும் ஒரே ஒரு முறை ராணா தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் திங்கட்கிழமை (அதாவது இன்று) முதல் 10 நாட்களுக்குள் ராணாவின் உடல்நிலை குறித்த புதிய அறிக்கையை சமர்ப்பிக்கவும் திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ராணா
ராணாவை தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டுமா? என்பது குறித்த தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்யவும் நிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மும்பை தாக்குதலில் தொடர்புடைய 64 வயதான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய தொழிலதிபரான தஹாவூர் உசேன் ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
மும்பையில் மறக்க முடியாத சோக சம்பவம்
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். பல்வேறு இடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினார்கள். பயங்கரவாதிகளின் கோழத்தனமான தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ராணா
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பயங்கரவாத தாக்குதலில் தாக்குதலின் முக்கிய சதிகாரரான டேவிட் கோல்மன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானியின் நெருங்கிய கூட்டாளியான தஹாவூர் உசேன் ராணா அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே தஞ்சம் புகுந்தார். மும்பை தாக்குதல் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதுள்ளதால் ராணாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவிடம் கேட்டு வந்தது.
ராணா மீதுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
இதன்பின்னர் அவரை நாடு கடத்த அமெரிக்க அரசு, அமெரிக்க உச்சநீதிமன்றம் பச்சைகொட்டி காட்டிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மும்பை தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாதி இஸ்லாமி (HUJI) ஆகியவற்றின் செயல்பாட்டாளர்களுடன் சேர்ந்து சதி செய்ததாக ராணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.