
Meghalaya Honeymoon Case: மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (29). தொழில் அதிபரான இவருக்கும் சோனம் (24) என்பவருக்கும் கடந்த மே மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து புதுமணத் தம்பதியினர் மே 20ம் தேதி தேனிலவு கொண்டாட மேகாலய மாநிலம் ஷில்லாங் சென்றனர். ஆனால் தேனிலவு சென்ற புதுமணத் தம்பதியினர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. தேனிலவு சென்ற மூன்றாவது நாளே அதாவது மே 23ம் தேதி அவர்கள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் கொலை
இது குறித்து குடும்பத்தினர் புகார் கொடுக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 8 நாட்கள் கழித்து ஜூன் 2ம் தேதி கூர்க் பள்ளத்தாக்கில் வெய்சாடோங் நீர்வீழ்ச்சிக்கு அருகே ராஜா ரகுவன்ஷி பிணமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ராஜா ரகுவன்ஷி இற்ந்த நிலையில், அவரது மனைவி புதுப்பெண் சோனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நிலவியது.
மனைவியே கொலை செய்த அதிர்ச்சி தகவல்
இது தொடர்பாக ஷில்லாங்கில் உள்ள சுற்றுலா வழிகாட்டி, அங்குள்ள மக்களிடம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஜூன் 9ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவகத்தில் வைத்து சோனம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சோனமே கணவரை தேனிலவுக்கு அழைத்துச் சென்று தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
என்ன காரணம்?
அதாவது சோனத்தின் தந்தை தேவி சிங் நடத்தி வரும் சிறிய பிளைவுட் தொழிற்சாலையில் ராஜ் குஷ்வாஹா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். தந்தையை பார்க்க அடிக்கடி தொழிற்சாலைக்கு செல்லும் சோனத்துக்கும் ராஜ் குஷ்வாஹாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜ் குஷ்வாஹா தன்னை விட 5 வயது குறைவாக இருந்தாலும் சோனம் அவரை காதலித்துள்ளார்.
காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டினார்
ஆனால் இருவரின் காதல் கைகூடாமல், சோனத்துக்கு ராஜா ரகுவன்ஷியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் செய்து கொண்டாலும் ராஜ் குஷ்வாஹாவின் நினைவிலேயே சோனம் இருந்துள்ளார். இதனால் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்து விட்டு காதலனுடன் சேர்ந்து வாழ திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தான் ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்து பிணத்தை 400 அடி பள்ளத்தாக்கில் தூக்கி வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.