
சிக்கிமில் உள்ள நாதுலா எல்லைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட தகவலின்படி, சுமார் 30 சுற்றுலாப் பயணிகள் பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சுமார் 350 சுற்றுலாப் பயணிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.
காங்டாக் - சோம்கோ ஏரி மற்றும் நாதுலா எல்லையின் சுற்றுலாத் தலங்களுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு மார்க்கின் பனி மூடிய மலைப் பகுதிக்கு அருகில் பல சுற்றுலாப் பயணிகள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தாலும் மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த பின்னர் பனிச்சரிவு மண்டலம் ஏற்பட்ட பகுதிக்கு செல்வதற்கு காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் மயங்கிய நிலையில் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பெரிய அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. நாதுலா என்ற இடம் சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு இயற்கை சூழல் அதிகமாக இருப்பதால், அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதும் வழக்கம்.