வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு டிச. 30ந் தேதிக்கு பின் நீட்டிப்பு?....மக்கள் வரிசையில் நிற்கும் அவலம் தொடரப்போகிறது

First Published Dec 24, 2016, 10:40 PM IST
Highlights


வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு டிச. 30ந் தேதிக்கு பின் நீட்டிப்பு?....மக்கள் வரிசையில் நிற்கும் அவலம் தொடரப்போகிறது

ஏ.டி.எம். மையங்கள், வங்கிகளில் இருந்து மக்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள், இம்மாதம் 30-ந்தேதிக்கு பின்னும் சில மாதங்கள் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ரூபாய் தடை

பிரதமர் மோடி, கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்து அறிவித்தார். அதன்பின் மக்கள் வங்கியில் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரையிலும், ஏ.டி.எம்.களிலும் நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வரை மட்டும் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

தட்டுப்பாடு

ஆனால், கடுமையான பணத்தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் 90 சதவீத ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டுகளுக்கு சில்லரை கொடுப்பதிலும் சிக்கல் நிலவுவதால், மக்கள் அதை செலவு செய்ய திணறுகின்றனர். ரூ.100, ரூ.50, புதிய ரூ.500 நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

50 நாட்கள்

இதற்கிடையே  செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்ட பின் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் பேசுகையில், “ 50 நாட்கள் அதாவது டிசம்பர் 30-ந்தேதிவரை கட்டுப்பாடுகள் இருக்கும் அதன்பின் தளர்த்தப்படும்'' என்று கூறி இருந்தார்.

எதிர்பார்ப்பு

ரிசர்வ் வங்கி இதுவரை 5.50 லட்சம் கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளதாக தெரிவித்தபோதிலும், மக்களிடம் சரளமாக பணம் புழங்காததால், பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அந்த கட்டுப்பாடுகள் முடிய இன்னும் 5 நாட்கள் மட்டும் இருப்பதால், மக்கள் டிசம்பர் 31-ந்தேதியை ஆவலுடன்எதிர்பார்த்துள்ளனர். 

 சில மாதங்கள் நீட்டிக்கும்...

இந்நிலையில், ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ வங்கிகளுக்கு போதுமான அளவு பணம் வந்து சேராத வரை, மக்கள் ஏ.டி.எம்.கள், வங்கிகளில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது தெரியவில்லை. இம்மாதம் 30-ந்தேதிக்கு பின்னும் சில மாதங்கள் இதே கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

அதை பொறுத்து இருந்து பார்ப்போம். எங்களிடம் பணம் இருந்தால், நாங்கள் மக்களுக்கு கொடுக்கப்போகிறோம். எங்களிடம் பணம் இல்லாவிட்டால், கட்டுப்பாடுகள் எதற்கு? பணம்தான் கொடுக்கமுடியாதே. எங்களிடம் எந்த அளவு பணம் இருக்கிறதோ அதே மட்டும்தான் கொடுக்க முடியும்.

உடனே நீக்கப்படாது

இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நாளையே இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்து தேவைக்கு ஏற்றார்போல் பணம் எடுக்க முடியும் என்று கூற முடியாது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாகவே நீக்கப்படும்'' என்றார்.

எப்போது வேண்டுமானாலும்

 தனியார் ஆங்கில செய்திச் சேனல் ஒன்று வெளியிட்ட செய்தில், வரும் 30-ந்தேதிக்கு பின் ஏ.டி.எம்., வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது. அதை நீட்டித்து எப்போது வேண்டுமானாலும் அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

tags
click me!