தெலங்கானா நகர திட்டமிடல் அதிகாரியிடம் ரூ.100 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு!

By Manikanda PrabuFirst Published Jan 25, 2024, 3:51 PM IST
Highlights

தெலங்கானா நகர திட்டமிடல் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தெலங்கானா நகர திட்டமிடல் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் அம்மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TSRERA) செயலாளரும், மெட்ரோ ரெயிலில் திட்டமிடல் அதிகாரியுமான எஸ்.பாலகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவின் 14 குழுக்கள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.

Latest Videos

அதிகாரிகளின் சோதனைக்கு குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்றாலும், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஊழல் தடுப்புப் பிரிவு கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனை நாளையும் தொடர வாய்ப்புள்ளது.

மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்!

இதுவரை சுமார் ரூ.40 லட்சம் ரொக்கம், 2 கிலோ தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்கள், 60 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், 14 செல்போன்கள், 10 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டில் பணம் எண்ணும் இயந்திரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனைக்கு உள்ளாகியிருக்கும் அதிகாரியின் வங்கி லாக்கர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. நான்கு வங்கிகளில் உள்ள அவருக்கு சொந்தமான லாக்கர்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொடர் சோதனையின் போது, இன்னும் ஏராளமான கணக்கில் வராத சொத்துக்கள் கண்டறியப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உள்நோக்கத்துடன் வழக்குகளை கையில் எடுக்கும் அமலாக்கத்துறை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

முன்னதாக ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (எச்எம்டிஏ) நகர திட்டமிடல் இயக்குநராக எஸ்.பாலகிருஷ்ணா பணியாற்றினார். அப்போதிருந்தே அவர் சொத்துக்களை குவிக்கத் தொடங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

click me!