
இரும்பு வியாபாரி வீட்டில் சோதனை
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் உள்ள இரும்பு வியாபாரியின் வீடு, அலுவலகம், மற்றும் தொழிற்சாலையில் நடைபெற்ற சோதனை தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ரூ.58 கோடி ரொக்கம், 32 கிலோ தங்க நகைகள், ரூ.16 கோடி மதிப்புள்ள வைர மற்றும் முத்து நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு பகலாக பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள்
மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவைச் சேர்ந்த நான்கு பெரிய இரும்பு வியாபாரிகள் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாகவும், அதிகப்படியான வருவாய்க்கு கணக்கு காட்டாமல் மோசடி செய்ததாகவும் புகார் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாசிக்கை சேர்ந்த ஐடி அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் துணையோடு கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை தொடங்கியது இந்த சோதனை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது இரும்பு வியாபாரி வீட்டில் உள்ள அலமாரிகள், படுக்கைகள் மற்றும் சில பைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததனர்.
மேலும் ஒரு பண்ணை வீட்டில் இருந்து கட்டுகட்டாக மறைத்து வைத்த பணத்தை ஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் இரும்பு வியாபாரி பெயரில் வாங்கப்பட்ட நிலம், பங்களாவின் சட்ட ஆவணங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கிய ஆவணங்களையும் தகவல் தொழில்நுட்பத் துறை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்