எனது உடல்நிலை குறித்து திகார் சிறை சொல்வது பொய்: அரவிந்த் கெஜ்ரிவால்!

By Manikanda Prabu  |  First Published Apr 22, 2024, 3:21 PM IST

திகார் சிறை நிர்வாகம் தனது உடல்நிலை குறித்து சொல்வது பொய் எனவும், தனக்கு தினமும் இன்சுலின் தேவைப்படுவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது உடல்நிலை குறித்து திகார் சிறை நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதாலும், தினமும் இன்சுலின் கோரி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஏப்ரல் 20ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் என்று திகார் சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்தது.

Latest Videos

undefined

இந்த நிலையில், திகார் சிறை கண்காணிப்பாளருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், தனது குளுக்கோஸ் மீட்டர் அளவீடு 250 முதல் 320 வரை ஆபத்தான வரம்பில் இருப்பதாகவும், அரசியல் அழுத்தம் காரணமாக சிறை நிர்வாகம் தனது உடல்நிலை குறித்து பொய் சொல்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், கவலைப்படும்படியாக எதுவும் இல்லை எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த அறிக்கையை கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார். தனது உடல்நலப் பிரச்சினைகளின் வரலாறு குறித்த விவரங்களை தமது மருத்துவர்கள் வழங்குவார்கள் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

திகார் நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க மறுத்துள்ளதாகவும், அவரை கொலை செய்ய சதி செய்வதாகவும் ஆம் ஆத்மி கட்சி அண்மையில் குற்றம் சாட்டியது. இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் வேண்டுகோளை ஏற்று, திகார் சிறை நிர்வாகம் ஏப்ரல் 20ஆம் தேதியன்று வீடியோ கான்பரன்ஸிற்கு ஏற்பாடு செய்தது. அப்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் குளுக்கோஸ் அளவு, அவரது உணவு மற்றும் மருந்துகள் பற்றிய விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.

அந்த சமயத்தில் இன்சுலின் பிரச்சினை குறித்து கெஜ்ரிவால் எதுவும் சொல்லவில்லை எனவும், வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனையின் போது அதனை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என்று திகார் சிறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

PM Modi Hate Speech பிரதமர் மோடி மத வெறுப்பு பேச்சு: காங்கிரஸ் கடும் கண்டனம்!

முன்னதாக, ஏப்ரல் 19ஆம் தேதியன்று டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் திகார் சிறை நிர்வாகம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 15 ஆம் தேதிகளில் முதல்வரின் உடல்நிலை சரிபார்க்கப்பட்டது. அவரது உடல்நிலையை மருந்து நிபுணர் ஆய்வு செய்தார். ஆனால், அவர் வாய்வழி நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளையே பரிந்துரைத்தார். முதல்வருக்கு இன்சுலின் வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

அரவிந்த்  கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து அமலாக்கத்துறை இயக்குநரகம், ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மருத்துவ ஜாமீன் பெறும் வகையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தும் பொருட்டு, டைப்-2 சர்க்கரை நோய் இருந்த போதிலும், கெஜ்ரிவால் தினமும் மாம்பழம், ஆலு பூரி மற்றும் இனிப்புகளை உட்கொள்வதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கெஜ்ரிவாலின் வழக்கறிஞர், சிறையில் மூன்று முறை மாம்பழங்களை கெஜ்ரிவால் உட்கொண்டதாகவும், நவராத்திரி பிரசாதமாக ஆலு பூரியை உட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி போட அனுமதிக்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் இந்த தகவலை தெரிவித்தார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வருகிற 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!