அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 24ஆம் தேதிக்குள் பிரதமர் மோடியால் அயோத்தி ராமர் கோயில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, மிகவும் தேடப்படும் பயங்கரவாதி ஷா நவாஸ் உட்பட மூன்று பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தாக்குதல் நடத்த அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயில், நெரிசலான சந்தைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைகளிலும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், பாஜக மூத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்: பொது மக்கள் பீதி!
மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கையாள்பவர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி ஃபர்ஹத்துல்லா கோரி என்பவர்தான் என்றும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற ஃபர்ஹத்துல்லா கோரி, இந்தியாவில் உள்ள இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் பெயரில் ஆன்லைன் ஜிஹாத்துக்கு தயார்படுத்தி வருகிறார்.
யார் இந்த ஃபர்ஹத்துல்லா கோரி?
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள அக்ஷர்தாம் கோயில் மீதான தாக்குதலில் ஃபர்ஹத்துல்லா கோரி ஈடுபட்டார். 2002 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள STF அலுவலகத்தின் மீது தற்கொலைத் தாக்குதலை அவர் திட்டமிட்டார். ஹைதராபாத்தில் வசிக்கும் ஃபர்ஹத்துல்லா கோரி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கி உள்ளார். ஃபர்ஹத்துல்லா கோரியை பயங்கரவாதியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.