
நட்சத்திர ஜோடியாக திருமணம் செய்து கொண்ட அனுஷ்கா, விராட் கோலி குறித்த செய்திகள் இப்போது இணையத்திலும் ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியாகி வருகின்றன. விராட் கோலி தன் காதலி அனுஷ்காவுக்கு திருமணப் பரிசாக அளித்த மோதிரத்தின் விலையைக் கேட்டால், நிச்சயம் ஆச்சரியம்தான் மிஞ்சும். கடந்த திங்கள் அன்று அனுஷ்கா சர்மாவை காதல் மணம் புரிந்து கொண்டார் கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி. அப்போது அவர் அணிவித்த மோதிரம் குறித்த செய்திதான் ஆச்சரியச் செய்தி.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த நான்கு வருடங்களாகவே காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாகவே சுற்றினர். ஆஸ்திரேலியா போய் விராட் கோலிக்கு ஊக்கம் கொடுத்து அசத்தினார் அனுஷ்கா ஷர்மா. கடந்த உலகக் கோப்பையின் போது இந்திய அணி கடைசிக் கட்டம் வரை வந்தும் கோப்பையைக் கோட்டை விட்டது. அப்போது, இருவரைப் பற்றியும் கேலியும் கிண்டலும் தூள் பறந்தன. அதனால், சிறிது காலம் ஒன்றாகச் சுற்றுவதற்கு இடைவெளி விட்டனர் இருவரும். பின்னர் வழக்கம் போல் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இதனிடையே இரு வீட்டாரும் சம்மதித்து இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், அவர்களின் திருமணம் மட்டும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென அவர்களது திருமணம் இத்தாலியின் மிலன் நகர் அருகே உள்ள டஸ்கேனி என்னும் இடத்தில், சொகுசு விடுதி ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்தத் திருமணத்தின் போது, விராட் கோலி தன் காதலிக்காகவே தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வைர மோதிரத்தை தன் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு திருமணப் பரிசாக அளித்தார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரபல வைர நகை வடிவமைப்பாளர்களால் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டதாம். இதன் விலை ஒரு கோடி ருபாய் என்று கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திருமணம் நடைபெற்ற சொகுசு விடுதிக் கட்டணத்தை விட மோதிரத்தின் விலை அதிகமாம்!