
இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் விளையாடிய ஆட்டங்களில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவில் இழந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது ஆடி வருகிறது.
தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பந்துவீச்சைத்தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான், 68 ரன்னில் திரிமன்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித்துடன் இணைந்தார்.
இதில் 40 வது ஓவரின் முடிவில் ரோகித் சதம் அடித்தார். பிரதீப் வீசிய 45-வது ஓவரில் 3 பந்துகளில் 2 சிக்சர், 1 ரன். 46-வது ஓவரில் 3 பந்தில் 1 சிக்சர் 1 ரன் எடுத்தார் ரோகித்.
47-வது ஓவரில் 5 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 16 ரன்கள் எடுத்தார். இந்த ஓவர் முடிவில் அவர் 177 ரன்களை எட்டிவிட்டார். அதனால், இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு நெருங்கி வந்தது.
இந்த நேரத்தில் மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்தனர். ரசிகர்களைவிட ரோகித்தின் மனைவி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். 48-வது ஓவரில் 3 பந்துகளில் 1 பவுண்டரி மட்டும் அடித்து 6 ரண்கள் எடுத்தார். இதனால் 183 ரன்களை அவர் எட்டினார்.
49-வது ஓவர் வந்தது. இதில் 1 சிக்சர் 2 இரண்டு ஒரு ரன்கள் என 8 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் ஸ்ட்ரைக்கை பெற்றார். 148 பந்துகளில் 191 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர் வந்தது. ரோகித் இரட்டை சதம் அடிப்பாரா என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கெல்லாம் மேலே ரோகித்தின் மனைவி, பதற்றத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
இரட்டை சதமடிக்க 9 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அடித்தார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுததன் மூலம் 199 ரன்களுக்கு வந்தார் ரோகித். அடுத்து வந்த பந்தில் 2 ரன்கள் எடுத்தன் மூலம் 3-வது முறையாக இரட்டை சதத்தை ரோகித் பூர்த்தி செய்து உலக சாதனை படைத்துள்ளார்.