
கணவனை கொலை செய்துவிட்டு, கள்ளக்காதலனை கணவனாக மாற்ற முயன்ற பெண் பிடிபட்டது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘மட்டன் சூப்’ மூலம் கள்ளக்காதல் ஜோடியின் நாடகம் அம்பலமாகி உள்ளது.
கற்பனையிலும் நினைத்துப்பார்க்காத வகையில் நடந்துள்ள இந்த கொடூர நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு-
காதல் திருமணம்
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ரெட்டிக்கும்- சுவாதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சுதாகர் வியாபாரம் செய்து வந்தார்.
காதல் வலையில்..
சுவாதி தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ‘பிசியோதெரபி’ டாக்டரான ராஜேஷ் என்பவருடன் சுவாதி காதலில் விழுந்தார். அவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக ரகசியமாக சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
ஆசை வார்த்தை
நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம், உன்னையும் உனது குழந்தைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என ராஜேஷ், சுவாதியிடம் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.
கள்ளக்காதலனின் ஆசை வார்த்தையில் மயங்கிய சுவாதி, ராஜேஷை திருமணம் செய்வதற்கு தனது கணவர் இடையூராக இருப்பார் என கருதி, அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
மயக்க ஊசி
அதைத் தொடர்ந்து, இரு வாரங்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சுதாகர் ரெட்டிக்கு சுவாதி மயக்க மருந்து ஊசி போட்டார்.
பின்னர் சுவாதி, தனது காதலன் ராஜேஷை வீட்டுக்கு வரவழைத்தார்.
அடித்துக் கொலை
சுவாதியின் வீட்டுக்கு வந்த ராஜேஷும் சுவாதியும், இணைந்து சுதாகரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுள்ளனர்.
‘பிளாஸ்டிக் சர்ஜரி’
அதன் பிறகு, சுதாகரின் உடலை காரில் எடுத்துசென்று காட்டில் எரித்துள்ளனர்.
அதன்பிறகுதான், காதலன் ராஜேஷை தனது கணவனாக மாற்றும் முயற்சியாக அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் விபரீத திட்டத்தை அரங்ேகற்றி இருக்கிறார்.
முகத்தில் பெட்ரோல் ஊற்றி..
சுவாதி கேட்டுக்கொண்டபடி அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, ராஜேஷ் தனது முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டார்.
உடனே ராஜேஷை ஐதரபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்த சுவாதி, தனது கணவர் சுதாகர் மீது யாரோ சில மர்ம ஆசாமிகள் ஆசிட் வீசி விட்டனர் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
சிகிச்சைக்கு ரூ.5 லட்சம்
அதன்பின் மருத்துவ சிகிச்சைக்காக சுதாகரின் குடும்பத்தார் ரூ.5 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்த ‘சுதாகரி’ன் நடவடிக்கையில் அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
‘மட்டன் சூப்’
சுதாகர் அசைவ உணவுகளை நன்றாக விரும்பி சாப்பிடுவார். மருத்துவமனையில் ராஜேஷ்க்கு மட்டன் சூப் கொடுத்த போது, அவர் நான் சைவம் என்றும் மட்டன் சூப் சாப்பிட மாட்டேன் என்றும் கூறி அதனை நிராகரித்துள்ளார். இதனால், அவர் சுதாகர் அல்ல என்ற சந்தேகம் உறுதியானது.
ஆதார் கார்டு மூலம்
அதைத் தொடர்ந்து போலீசாரிடம் அது குறித்து புகார் செய்யப்பட்டது. ராஜேஷின் விரல் ரேகைகளை போலீசார் சோதித்த போது, அது சுவாதியின் கணவர் சுதாகரின் விரல் ரேகையுடன் பொருந்தவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் ஆதார் கார்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர் அதுவும் பொருந்த வில்லை. இதன் மூலம் உண்மை அம்பலம் ஆனது.
சுவாதியும் ராஜேஷும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீஸார் சுவாதியையும் ராஜேஷையும் கைது செய்துள்ளனர், ராஜேஷ் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமாவைப் பார்த்து..
சுவாதி கொடுத்த வாக்குமூலத்தில் தெலுங்கில் வெளியான ‘யெவாடு’ என்ற சினிமாவை பார்த்து தாங்கள் இந்த ஆள் மாறாட்ட மோசடியை கூறி உள்ளார்.
இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ராம் சரண் தேஜா, அல்லு அர்ஜூன் ஆகியோர் நடித்து உள்ளனர்.