ஆந்திர மாநிலத்தில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் செல்லவுள்ளார்
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. சம்பவ இடத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் விஜயநகர மாவட்ட இணை ஆட்சியர் மயூர் அசோக் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்த விபத்தில் சிக்கி 50 பேர் காயமடைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபிகா தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம், விஜயநகர மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் செல்லவுள்ளார். அங்கு ஆய்வு மேற்கொள்ளும் அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி!
முன்னதாக, ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்த அம்மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்படும் எனவும், பிற மாநிலத்தை சேர்ந்த உயிரிழ பயணிகளின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோஜன் அறிவித்துள்ளார்.
ரயில் விபத்தையடுத்து அந்த மார்க்கத்தில் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 22 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் தேசிய பேரிசர் மீட்பு படையினர், ரயில்வே ஊழியர்கள், மாநில போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.