டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறி, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான சிபிஐ அதிகாரிகளின் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்தது.
undefined
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்விஎன் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை 6 முதல் 8 மாதங்களில் முடிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணை மெதுவாக நடந்தால், மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி பிற்காலத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தது.
மதுரையில் இரண்டு புதிய மேம்பாலம்: கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
இந்த வழக்கில், லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானங்களின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றும், சட்டத்தின் கீழ் என்ன பாதுகாப்பு இருந்தாலும், வழங்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கலால் கொள்கையை (இப்போது ரத்து செய்யப்பட்டு விட்டது) மாற்றியமைப்பதற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம் முன்னறிவிப்பு குற்றத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றால், மணீஷ் சிசோடியா மீதான பணமோசடி வழக்கை நிரூபிப்பது கடினம் எனவும் அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் கூறியது.
முன்னதாக, டெல்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என கூறி ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.